வாட்ஸ்அப் குழுவில் கமெண்ட் இட்டது தொடர்பான வழக்கு - ரயில்வே அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு - ரயில்வே
ஆர்.பி.எஸ்.எப். அலுவலகம் சார்ந்த வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவலை படித்து வழக்கமாக எல்லோரும் பயன்படுத்தும் கட்டை விரலை உயர்த்தி காண்பிக்கும் கமெண்ட்தான் அனுப்பி இருந்தேன் என்று நான் தெரிவித்தேன்.
மதுரை: வாட்ஸப் குழுவில் கமெண்ட் இட்டது குறித்து டெல்லி ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல், தலைமை பாதுகாப்பு கமிஷனர், திருச்சி கமாண்டிங் அதிகாரி உள்ளிட்டவர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி கஜாமலை பகுதியை சேர்ந்த நரேந்தர் சவுகான், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையில் காவலராக சேர்ந்தேன். பின்னர் திருச்சியில் அர்ப்பணிப்புடன் எந்த ஒரு புகாருக்கும் ஆளாகாமல் பணியாற்றி வந்தேன்.
கடந்த பிப்ரவரி 2018 அன்று நான் பணியில் இருந்தபோது, எனது செல்போனில் ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், ஊழியர்களுக்கான வாட்ஸ் அப் குழுவை பார்த்தேன். அந்த சமயத்தில் அந்த குழுவில், மேகாலயாவில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அர்ஜூன் தேஷ்வால் என்பவர், தனது உயர் அதிகாரியான உதவி கமான்டன்ட் எம்.சி.தியாகி என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் வந்தது.
இந்த தகவலை படித்ததும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன். வழக்கமாக கட்டை விரலை உயர்த்தி கமென்ட் அனுப்பினேன். இந்தநிலையில், உயர் அதிகாரியை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் சுட்டுக்கொன்றதாக வாட்ஸ்அப்பில் வந்த தகவலை படித்து அதற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்த நான் உள்பட 7 பேரை விசாரணைக்கு அழைத்தனர்.
ஆர்.பி.எஸ்.எப். அலுவலகம் சார்ந்த வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவலை படித்து வழக்கமாக எல்லோரும் பயன்படுத்தும் கட்டை விரலை உயர்த்தி காண்பிக்கும் கமெண்ட்தான் அனுப்பி இருந்தேன் என்று நான் தெரிவித்தேன்.
இதை பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தனர். இந்தநிலையில் மேல் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக குறுஞ்செய்தியை நான் அனுப்பியதாக கூறி, என்னை பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.
என்னை பணியில் இருந்து நீக்கியது சட்டவிரோதம். அற்ப காரணத்தை கூறி, என்னை பணியில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதேபோல பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை போலீஸ்காரர் கமலேஷ்குமார் மீனாவும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களுக்கு தங்களின் கருத்துகளை தெரிவிப்பதற்கு தண்டனை இருப்பதாக தகவல் தொழில்நுட்பச்சட்டத்தில் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனவே மனுதாரர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து டெல்லி ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல், தலைமை பாதுகாப்பு கமிஷனர், திருச்சி கமாண்டிங் அதிகாரி உள்ளிட்டவர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை வருகிற மார்ச் மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.