மதுரை:மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் குரங்கம்மை பரிசோதனை ஏற்பாடுகளை பார்வையிட்டார். மேலும் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர், மள்ளப்புரம் பகுதிகளில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையங்களை தொடங்கி வைத்தார். பிறகு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகளை பார்வையிட்டார்.
பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இன்னுயிர் காப்போம் திட்டத்தை பொறுத்தவரை 96 ஆயிரத்து 807 பேர் விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இதில் பல ஆயிரக்கணக்கான பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இது போன்று விபத்துகளில் சிக்கியவர்களுக்காக கடந்த 8 மாதங்களில் அரசால் செலவழிக்கப்பட்ட தொகை ரூ.87 கோடியே 34 லட்சத்து 44 ஆயிரத்து 609 ஆகும்.
தமிழ்நாடு முழுவதும் 680-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்த சிகிச்சையை வழங்கியுள்ளன. இந்தாண்டு நிதிநிலை அறிக்கையின் மூலம் மதுரை மாவட்டத்திற்கு மட்டும் 23 அறிவிப்புகளின் மூலம் 110 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. அரசு மேற்கொண்ட கடும் முயற்சியின் காரணமாய் கடந்த நான்கைந்து மாதங்களாக கரோனாவால் ஏற்படுகின்ற உயிரிழப்பு இல்லை என்ற நிலையை எட்ட முடிந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு நல்ல நிலையை எட்டியிருக்கிறது.
முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 95.5 சதவிகிதமாகும். 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 88.52 சதவிகிதமாகும். மாநில அளவில் 95.51 சதவிகிதமாக இருந்தாலும், மதுரையை பொறுத்தவரை முறையே 86.20 மற்றும் 75.08 சதவிகிதமாகவே உள்ளது. இதனை அதிகப்படுத்துவதற்கான பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.