மதுரை: நொறுக்கு தீனி தயாரிப்பு நிறுவனங்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய முறை அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் நிலைய உள் வளாகம் மற்றும் நடைமேடைகளில் உணவு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பிஸ்கட், சாக்லேட், கேக் போன்ற நொறுக்குத்தீனிகள் பாக்கெட்டுகளில் வைத்து விற்கப்படுகின்றன.
இது மாதிரியான நொறுக்கு தீனிகளை ரயில் நிலைய உணவு கடைகளில் விற்க, தயாரிப்பு நிறுவனங்கள் ரயில்வே நிர்வாகத்தின் முன் அனுமதியை பெற வேண்டும். அனுமதி பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் உணவு பொருட்கள் மட்டுமே ரயில் நிலைய உணவு கடைகளில் விற்க முடியும்.
இந்த அனுமதி ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப மனுக்கள் மற்றும் ஒப்பந்த புள்ளிகள் கேட்டு இறுதி செய்யப்படும். தற்போது இந்த முறை மாற்றம் செய்யப்பட்டு எந்த நேரத்திலும் தயாரிப்பு நிறுவனங்கள் ரயில்வே அலுவலகத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை அளித்து அனுமதி பெறலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்த சிறுமிக்கு வெற்றிகரமாக டயாலிசிஸ் சிகிச்சை.. தஞ்சை அரசு மருத்துவர்கள் அசத்தல்!
இது குறித்த விண்ணப்பம், விதிமுறைகள், விபரங்கள் ஆகியவை https://sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,1,304,371,398,1891 என்ற இணையதளத்தில் உள்ளது. இந்த இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் சென்னை பயணிகள் சேவை பிரிவு முதன்மை வர்த்தக மேலாளர் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பித்து அனுமதி பெறலாம்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறுகையில், “இந்த புதிய முறை அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கும். வர்த்தகர்கள் எப்போது வேண்டுமானாலும், தேவையான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பித்து எளிதாக அனுமதி பெறவும் உதவும்.
இதில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாலும், அதிக சிக்கல் இல்லாத நடைமுறைகள் இருப்பதாலும், இந்த சிறப்பு சலுகை வர்த்தகர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ரயில் பயணிகளுக்கு பல்வேறு நிறுவன தயாரிப்புகள் பல்வேறு சுவையுடன் உணவு பொருட்கள் கிடைக்க வாய்ப்பாகவும் அமையும்” என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: "மக்களவைத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் கட்சியாக அதிமுக இருக்கும்" - மாஜி அமைச்சர் செங்கோட்டையன்!