மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் நியோ மேக்ஸ் என்ற பிரபல நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்ததுள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாகத் தருவதாகவும், மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் இந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் முதலீடு செய்யப்பட்டு நபர்களுக்கு முறையாகப் பணத்தைத் திருப்பி வழங்காமல், மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இந்நிறுவனத்தில் முதலீடு செய்த அனைவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்டோர், இந்த நிறுவனத்தின் மோசடி குறித்து புகார் அளித்துள்ளனர். அதுமட்டுமன்றி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடமும் நாள்தோறும் புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்றே அதிகரித்த நிலையிலேயே புகார்கள் வந்துள்ளன.
இதன் அடிப்படையில் தனியார் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்நிறுவனத்திற்குச் சொந்தமான 17 கிளை நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு, விலை உயர்ந்த கார்கள், தங்கம் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளைக் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த தனியார் நிறுவனத்தின் திருநெல்வேலி கிளை இயக்குநர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சார்ந்த சைமன் ராஜா மற்றும் கபில் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதனையடுத்து வருகின்ற ஜூலை 26ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி ஜோதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த மோசடி தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு இரு நாட்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட சிலர் மீது மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:Vellore: பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்த தந்தை, பாட்டி கைது - மனைவியின் பரபரப்பு புகார்!