மருத்துவ படிப்பு கலந்தாய்வு: மதுரையில் 5 மாணவர்கள் தேர்வு! - NEET 2020 UG counselling
மதுரை: மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு மருத்துவ படிப்பில் தமிழ்நாடு அரசு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று(நவ-18) தொடங்கியுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் எம்.புளியங்குளம் அரசுப் பள்ளி மாணவர் கணேஷ்குமார் தேனி மருத்துவ கல்லூரிக்கும், எம்.சுப்புலாபுரம் அரசுப் பள்ளி மாணவர் கார்த்திக் ராஜா திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கும், மதுரை மகபூப் பாளையம் அரசுப் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவி சீதாலட்சுமி தேனி மருத்துவ கல்லூரிக்கும், மதுரை மாநகராட்சி நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் பள்ளி மாணவி பவித்ரா தூத்துக்குடி மருத்துவ கல்லூரிக்கும், அலங்காநல்லூர் அரசுப் பெண்கள் பள்ளி மாணவி தீபிகா சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவ கல்லூரிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த மருத்துவ கலந்தாய்வில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மேலும் பலர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன