மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் சிறப்புச் சட்டம் ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பாக 400க்கும் அதிகமான பிரச்சார விளக்க நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இது தொடர்பாக தவறான அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், இதன் உண்மை நிலையை உணர்த்தவே இந்த விளக்கப் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
திமுக-காங்கிரஸ் கட்சியினர் இந்தியர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த ஆர்வம் காட்டாமல், பிரிவை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர் என்றும் அறிஞர் அண்ணா பொறுப்பில் இருந்த போது தேசிய ஒற்றுமைக்காக குரல் கொடுத்தார் என்றும் சுட்டிக்காட்டினார். தற்காலிகமான ஒரு சட்டத்தை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிப்பது நெறிகளுக்கு எதிரானது இல்லையா? என்று கேள்வியெழுப்பிய அவர், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் சமூக நீதிக்காக போராடுவதாக கூறி ஏமாற்றுகின்றனர் என்று சாடினார். சமூக நீதிக்காக போராடுவதாக கூறும் ஸ்டாலின், காஷ்மீரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை என்பதை மட்டும் எவ்வாறு ஏற்கிறீர்கள்? இது அநீதிக்கு எதிரானது இல்லையா? என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.
காஷ்மீரிலிருக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டாமா? இது பட்டியலினத்தவர்களுக்கும் அவர்களின் சமுக நீதிக்கும் எதிரானது இல்லையா? பின் ஏன் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? என்றார்.
காஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இது தொடர்பாக விவாதிக்கத் தயார் என்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காஷ்மீரின் வரலாறு குறித்து ஸ்டாலின் பயில வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஏமன், குவைத் போன்ற நாடுகள் பாகிஸ்தான் பிரதமரை மோடியுடன் கலந்தாலோசிக்க சொல்லும் நிலையில் ஸ்டாலினும், ராகுலும் பாகிஸ்தான் பிரதமர் போல பேசிவருவதாகவும் முரளிதர ராவ் சாடினார்.