தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பரவுகிறதா கருப்பு பூஞ்சைத் தொற்று? - தமிழ்நாடு நிதியமைச்சரின் தகவலால் பரபரப்பு!

மதுரையில் கருப்பு பூஞ்சைத் தொற்று பரவுவதாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சைத் தொற்று
கருப்பு பூஞ்சைத் தொற்று

By

Published : May 21, 2021, 6:49 AM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனுடன் மற்றொரு புதிய தொற்றாக கருப்பு பூஞ்சை தொற்று மதுரையிலும் பரவத் தொடங்கியுள்ளது என்ற தகவல் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

இது குறித்து மர்ஜோஸ் என்பவர் தனது ட்விட்டரில்,’தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 'மியூகோர்மைகோசிஸ்' எனும் கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. ஆனால் இது குறித்த போதுமான தரவுகள் நம்மிடம் இல்லை.

தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்ட ட்வீட்

எனது நண்பரின் தாயாருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அதற்கு உரிய மருந்தினைப் பெற்றுத் தர வேண்டுகிறேன்’ என, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மருத்துவர் எழிலன் உள்ளிட்டோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த தமிழ்நாடு நிதியமைச்சர், ’இதனை பொது மக்களுக்கான எச்சரிக்கையாக கருத வேண்டும். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையினரும், இதுகுறித்து என்னை தொடர்பு கொண்டார்கள்.

உரிய மருந்து பெற்றுத் தருவதற்கு கடுமையாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 50 நபர்களுக்கு இந்த மருந்து தேவைப்படுகிறது. இந்த மருந்தை தருபவர்கள் மிகக் குறைவாகவும், அதே சமயம் விலை அதிகமாகவும் உள்ளது.

மர்ஜோஸ் என்பவர் வெளியிட்ட ட்வீட்

மாநிலம் கடந்து செல்ல முடியாத சூழலும், தற்போது நிலவுவதால் மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், வீட்டில் இருத்தல் போன்ற நடை முறைகளை பின்பற்றுவது அவசியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட இரண்டு ட்விட்டர் பதிவுகள் மூலமாக மதுரையில் கருப்பு பூஞ்சைத் தொற்று உள்ளதாக அறியப்படுகிறது. இதன் காரணமாக பொது மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகமும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகமும் உரிய விளக்கத்தை தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேலுவிடம் கேட்டபோது, "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 45 நாட்களில் 20 நபர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்தது.

பாதிக்கப்பட்ட 20 நபர்களுக்கும் உரிய மருத்துவம் அளித்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் சிலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கிய நிலையில் குணமடைந்துள்ளனர்.

கருப்பு பூஞ்சை பதிப்பு காரணமாக இதுவரை உயிரிழப்போ, கண் பார்வை இழப்போ ஆகிய பாதிப்புகள் இல்லை. கருப்பு பூஞ்சை நோய் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை அது ஏற்கனவே உள்ள நோய் தான்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details