மதுரை:பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா நேற்று(செப்.22) மதுரையில் தொழிலதிபர்கள் மத்தியில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95% பணிகள் நிறைவடைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மதுரை மற்றும் விருதுநகர் மக்களவை உறுப்பினர்களான சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் இன்று(செப்.23) ஆய்வு மேற்கொண்டனர்.
பிறகு செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், 'மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைப்பணி 95% முடிந்துவிட்டது என்று ஒரு பொய்யான தகவலை பாஜக அகில இந்தியத்தலைவர் ஜே.பி.நட்டா கூறியது பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
ஒரே வாரத்தில் எப்படி கட்டிமுடித்துள்ளனர் என பார்ப்பதற்கு இங்கே வந்துள்ளோம். இந்த இடத்தில் இருந்த பலகையைக் காணவில்லை. ஒரே ஒரு செங்கல் இருந்தது. அதுவும் இல்லை. ஜப்பான் நிறுவனத்தோடு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு நிதி ஒதுக்கீடும் செய்துவிட்டது.
ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒன்றிய அரசு இதுவரை ஒப்புதல் தரவில்லை. தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய போதுமான நிலத்தையும் ஒப்படைத்துவிட்டது. எனவே, அமைச்சரவை கூறி உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். பொய் சொல்வதே முழு நேர வேலையாக பாஜகவினர் கொண்டுள்ளனர்.
ஒரு பைசா கூட இதுவரை ஒதுக்கீடு செய்யாமல் மதுரை விமான நிலையத்திற்கு ரூ.540 கோடி ஒதுக்கீடு செய்ததாக நட்டா பொய் கூறியுள்ளார். நிதி ஒதுக்கீட்டிற்கான அரசு ஆணையை ஒன்றிய அரசு தரமுடியுமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
அவரைத்தொடர்ந்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், 'முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையாய் எய்ம்ஸ் 95% வேலை முடிந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
நிலம் இங்கே... மருத்துவமனை எங்கே? மதுரை எய்ம்ஸிற்கு படையெடுத்த எம்.பி.க்கள் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை போன்று கிணறை காணவில்லை என்பது போல் நட்டா கட்டிய 95% கட்டடத்தை காணவில்லை. அதைத்தேடி கண்டு பிடிக்க வந்தோம். மதுரை விமான நிலையத்திற்கு ரூ.540 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மக்களைத்தொடர்ந்து பாஜக ஏமாற்றி வருகிறது. எய்ம்ஸை பொறுத்தவரையில் பாஜக பொய்யான தகவலை பரப்புகிறது. 23 எய்ம்ஸ் மமருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பானிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, ஜைகா நிறுவனத்திடம் நிதி பெற்று நடத்துகிறது.
பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அரசின்பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது. 6.86 விழுக்காடு நிதி ஜப்பானின் ஜைகா நிறுவனம் தான் ஒதுக்கீடு செய்கிறது.
அதற்கான ஒப்புதல் வழங்கியும் ஒன்றிய அரசு கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, அதை அமல்படுத்தி வேலை தொடங்குவதற்கான டெண்டர் விடப்பட வேண்டும். இதற்கான பணிகளை இதுவரை ஒன்றிய அரசு செய்யவில்லை. அண்ணாமலை முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். மதுரை விமான நிலையத்திற்கு ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது எனக் கூறுவது மதுரை மக்களை ஏமற்றுகின்ற வஞ்சிக்கின்ற செயல்” எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: 'எங்களுடைய பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆ.ராஜா செயல்படுகிறார்' - செல்லூர் ராஜூ