சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில், சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள கிராமியக் கலைஞர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, பொங்கல் விழா கொண்டாடி, அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் புத்தாடைகள் வழங்கினார்.
முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய கிராமியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறும்போது, "ஒவ்வொரு முறையும் சென்னை சங்கமம் நடக்கக்கூடிய இந்த சூழலிலே, கலைஞர்கள் சொந்த ஊரை விட்டுவிட்டு சென்னையில் நிகழ்ச்சிக்காக வந்து இருக்கக்கூடிய சூழலில், அவர்களோடு பொங்கல் திருநாளைக் கொண்டாடக்கூடிய ஒரு வாய்ப்பாக இந்த வாய்ப்பு அமைந்து இருக்கிறது.
சென்னை சங்கமம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதுணையோடு சென்னை சங்கமம் மறுபடியும் நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பகுதியிலிருந்து புதிய கலைஞர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது” என தெரிவித்தார்.