மதுரை: கொடுத்த பணத்தை திரும்பக்கேட்டால், கொலை மிரட்டல் விடுவதாக தொண்டியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ''நான் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் வசித்து வருகிறேன். கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்த அகமது ராய்ஸ் என்பவர் தான் கடனில் சிக்கி உள்ளதாகவும்; அதில் இருந்து மீண்டு வர தனக்கு கடன் தந்து உதவுமாறும் என்னிடம் கேட்டார்.
அதன் அடிப்படையில் நான், எனது நகையை அடமானம் வைத்து அவருக்கு ஏழு லட்சம் ரூபாய் கடனாக அளித்தேன். இது தொடர்பாக கடன் பத்திரமும் அவரது வீட்டில் வைத்து கையெழுத்துட்டு தந்தார். அவர் தன்னிடம் பெற்ற கடனை ஒரு மாதத்தில் திரும்பத் தருவதாகக் கூறியிருந்தார். ஆனால், அவர் அதன் படி ஒரு மாதத்தில் திரும்பத் தரவில்லை.
இதுதொடர்பாக அவரிடம் கேட்ட பொழுது, நான் பழைய கார்களை விற்பனை செய்து வருகிறேன். அதில் இந்த தொகையை முதலீடு செய்தால் தான் அதிக லாபம் பெற முடியும். பல்வேறு நபர்கள் இதில் முதலீடு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:Coimbatore - சரளபதி பகுதியில் பட்டப்பகலில் உலாவரும் மக்னா யானை பீதியில் பொதுமக்கள்!
உங்களுக்கும் அதிக லாபம் பெற்று தருகிறேன். இதில் உங்கள் நண்பர்களுக்கும் விருப்பம் இருந்தால் அவர்களையும் முதலீடு செய்யும்படியும் ஆசை வார்த்தைக் கூறினார். இதனை நம்பி நான் மொத்தமாக 15 இலட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளேன். பணத்தைப் பெற்றுக் கொண்ட ராய்ஸ் என்பவர், பல மாதங்களாகியும் அந்த தொகையினைத் திரும்பத் தரவில்லை. இது தொடர்பாக அவரை அணுகிகேட்டபொழுது பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விட்டார்.
மேலும், இதுதொடர்பாக தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து, பல நாட்கள் ஆகியும்; தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் இந்த வழக்கு விசாரணை வேறொரு அதிகாரிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தனர்.
அதன் பின்பு இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி மனுதாரரின் புகார் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 15 நாட்களில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:நடுக்கடலில் திடீரென பற்றி எரிந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான படகு - காரணம் என்ன?