மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் அமரேஸ் இளங்கோவன். இவரது மனைவி தீபா. இத்தம்பதிகளின் ஒரே மகன் ஹரீஸ்வர்மன் (7), மதுரை புனித பிரிட்டோ மெட்ரிக் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன், சைக்கிள் வாங்க சேமித்து வைத்த ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தான்.
இதனையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அச்சிறுவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.
சிறுவன் ஹரீஸ்வர்மனுக்கு முதலமைச்சர் பரிசாக வழங்கிய சைக்கிளை, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிறுவனிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " ஹரீஸ்வர்மன் என்ற சிறுவன் தனக்கு மிதிவண்டி வாங்குவதற்காக வைத்திருந்த உண்டியல் தொகையை #COVID19 தடுப்பிற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிய செய்தி கேட்டு நெகிழ்ந்தேன். இத்தகைய உணர்வே தமிழகத்தின் வலிமை!
சிறுவனுக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுத்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.