மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் ரூ.25 .30 லட்சம் செலவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் துவரிமான் கண்மாய் செல்லும், வரத்து கால்வாய்களை சீரமைத்து புதிய கால்வாய்கள் அமைக்கும் பணியினை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் கீழ்மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த துவரிமான் வரத்து கால்வாய்களின் 3 கிளை கால்வாய்கள் சங்கமிக்கும் இடத்தில் 8,150 மீ தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கால்வாய்கள் கிறிதுமால் நதியுடன் இணைக்கப்படுகின்றன.
மதுரை மாவட்டத்திற்கு ஏறத்தாழ 1,057 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நீர் நிலைகள் சீரமைக்கப்படவுள்ளன. மாடக்குளம், தென்கரை, கொடிமங்கலம் கண்மாயில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை அமைத்து நீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.