மதுரை திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள புளியங்குளம் பகுதியில் அதிமுக, அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிக் கட்ட பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரை செய்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், 'முதலமைச்சர் தலைமையில் முறையான சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் உட்பட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. இது உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டியில் பெற்ற வெற்றிகளைவிட பெருமையான ஒன்றாகும்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தன்னுடைய மாண்பு மற்றும் பொறுமை இழந்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பெருமைக்கு அரசியல் சாயத்தை பூசுகிறார். இந்த அங்கீகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. இது தமிழ் மக்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சரின் நிர்வாகத் திறமைக்கும் கிடைத்த பெருமை’ என்றார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால்தான் தமிழ்நாடு அரசுக்கு முதன்மை மாநில விருது கிடைத்துள்ளது என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டிவருகிறார்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்திய நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களையும் பட்டியலிட்டு பரிசீலித்த பிறகுதான் முதலிடம் கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் இது குறித்து ஒப்பிடாமல் இருந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து பேசிய அவர், ‘சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தலை விடவும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகமாகத்தான் இருக்கும். எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் சென்று தடை வாங்க நினைத்தாலும் கூட மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்திருப்பது தற்போது நடந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் சாட்சியமாக இருக்கிறது. முதலமைச்சர் நீர்மேலாண்மை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு சாதகமான பதில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.