மதுரை:கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கட்டுமானப் பணி மதுரையில் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக இந்த நூலகம் திறந்து வைக்கப்பட உள்ளது. அதன் இறுதிகட்டப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டடம் 132 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 215 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைக்கிறார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைத்த பின், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
கலைஞர் நூலகப் பணிகள் வரும் 10ஆம் தேதிக்குள் முடிவடையும். நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தை பயன்படுத்தியது காலையில் தான் தெரிய வந்துள்ளது. (பொதுக்கூட்டத்தில் உயர் நீதிமன்றக் கிளை கலைஞர் போட்ட பிச்சை என எ.வ.வேலு பேசினார்). பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான வார்த்தைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். உயர் நீதிமன்றக்கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்குப் பதிலாக, பிச்சை என தவறான வார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன். பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.