திருச்சி:திருச்சி அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு காலனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் காலனி என்ற பெயரை நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள F. கீழையூர் பஞ்சாயத்தின் கீழ் சுமார் 18 குக்கிராமங்கள் உள்ளன. பஞ்சாயத்து தலைவர் உயர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், நாங்கள் வசிக்கும் பகுதிக்கு F. கீழையூர் காலனி என்று பெயரிட்டு, வருவாய் மற்றும் பஞ்சாயத்து ஆவணங்களில் மாற்றி உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களில் F.கீழையூர் என்று இருந்தது. தற்போது, F.கீழையூர் காலனி என்று பெயர் மாற்றும் செய்துள்ளனர். மேலும் சாலை பெயர் பலகையிலும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.