மதுரை:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், "நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஐந்தருவி, குற்றாலம் அருவி உள்ளிட்ட இயற்கை அருவிகள் உள்ளன. சீசன் காலங்களில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழியும் சூழலில், பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான ரிசார்டுகள் தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர்.
இதற்காக இயற்கையான அருவிகளின் நீர் வழி பாதையை மாற்றி இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகினார். தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உடன் நீர்வீழ்ச்சிகள் மாற்றம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும், உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் ரிசார்ட்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், இது குறித்து சுற்றுலாத்துறை இயக்குநர் தலைமையில் நில நிர்வாக ஆணையர் , தலைமைக் வன காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், “நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஐந்தே நாளில் குழு அமைத்த அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம்” என்றனர்.
“அதேசமயம் இயற்கை நீர்வீழ்ச்சி பாதையை நீர் வழி பாதையை மாற்றும் நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இது போன்ற ரிசார்ட்ஸ்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை நாளை மாலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை (டிச.02) தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க:மாநகராட்சியில் யாகசாலை: கடப்பாரையுடன் வந்த போராட்டக்காரர்கள் கைது