தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Madurai Metro: வைகை ஆற்றின் அடியில் மெட்ரோ ரயில் பாதை - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு - மதுரை மெட்ரோ ரயில்

மதுரை மாநகராட்சியில் 32 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 29, 2023, 8:27 AM IST

Madurai Metro

மதுரை: மதுரை மெட்ரோ திட்டம் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சியில் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. அதற்கான திட்ட அறிக்கை வருகிற ஜூலை 15ஆம் தேதி மெட்ரோ நிர்வாகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், அதற்கான இடங்களை மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையிலான குழுவினர், நேற்று (ஜூன் 28) வடக்கு மாசி வீதி, வடக்கு ஆவணி மூல வீதி மற்றும் தல்லாகுளம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தின் அடியில் மெட்ரோ ரயில் செல்லக்கூடிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெட்ரோ தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் உள்ளிட்ட மெட்ரோ குழுவினர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக், “மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை வருகிற ஜூலை 15ஆம் தேதி தாக்கல் செய்கிறோம். முக்கிய அம்சங்கள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். மொத்தமாக 32 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் 5 கிலோ மீட்டர் பூமிக்கு அடியிலும், 27 கிலோ மீட்டர் உயர்மட்ட ரயில் பாதையாகவும் அமைய உள்ளது.

இதையும் படிங்க:குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடும் அதிகாரம்: நீதிமன்றம் சொல்வது என்ன?

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர் செல்லும் மாசி வீதியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத விதத்தில் மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலைய நிறுத்தம், மீனாட்சியம்மன் கோயில் ரயில் நிறுத்தம், கோரிப்பாளையம் ரயில் நிறுத்தம் என 3 ரயில் நிலையங்கள் பூமிக்கு அடியில் அமைக்கப்படுகின்றன.

வைகை ஆற்றின் அடியில் 10 மீட்டர் ஆழத்தில் ரயில் பாதை செல்வதால் பெருமளவு மக்களுக்கு பாதிப்பு இருக்காது. அதே போல் மீனாட்சி அம்மன் கோயில் மெட்ரோ நிறுத்தம் வடக்கு மாசி வீதியில் அமைப்பதா அல்லது ஆவணி மூல வீதியில் அமைப்பதா என இறுதி முடிவு எடுக்கப்படும். பூமிக்கு அடியில் செல்லும் மெட்ரோ பாதையில் 1.5 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு ரயில் நிறுத்தமும் உயர் மட்ட பாதையில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிறுத்தமும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க:மதுரை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு... பதவி விலகப் போவதாக கூறிய எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details