தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை உடனே இறக்குமதி செய்ய வேண்டும்' - சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்! - black fungus

கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை உடனே இறக்குமதி செய்ய சு.வெங்கடேசன் எம்.பி., மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

சு வெங்கடேசன் எம்பி மத்திய அரசுக்கு கடிதம்
சு வெங்கடேசன் எம்பி மத்திய அரசுக்கு கடிதம்

By

Published : May 25, 2021, 5:02 PM IST

கரோனா பெருந்தொற்றுடன் தற்போது பரவிவரும் கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை மத்திய அரசு உடனடியாக இறக்குமதி செய்ய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று (மே.25) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,'கரோனா தொற்றின் அளவு தற்போது சற்று குறைந்து வந்தாலும் இன்னும் சில சிறிய ஊர்களிலும், கிராமங்களிலும் குறைந்தபாடில்லை.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்னும் அதிக அளவில் தான் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கைகள் இருக்கின்றன.

கறுப்பு பூஞ்சை நோய் மக்களிடயே தாண்டவமாடத் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்டப் பல மாநிலங்களில் கறுப்பு பூஞ்சை நோயின் அதிதீவிரத்தை உணர்ந்து இந்த நோயை அரசு 'அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' அறிவித்து உள்ளது.

கறுப்பு பூஞ்சை நோயின் தீவிரத்தன்மை, நோயாளர்களில் பலருக்கு உயிரிழப்புகளை அதிவிரைவில் ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது.

இதற்கு தேவையான மருந்து 'லிபோசோமல் அம்போடேரிசின் பி' என்பது தெரிய வந்துள்ளது. மருந்து இது தான் என்பதையும் மூத்த மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர். ஆனால், அது நம் நாட்டில் இப்போது குறைந்த அளவில் தான் உள்ளது.

தற்போது, இருக்கும் காலக்கெடுவில் நம் உள்நாட்டு மருத்துவ நிறுவனங்கள் அத்தனை விரைவில் இந்த மருந்தை உற்பத்தி செய்வது கடினம் என்பதையும் உணர முடிகிறது. மேற்கத்திய நாடுகளை விட கறுப்பு பூஞ்சை நோய் இந்தியாவில் தான் அதிகம் காணப்படுகிறது.

தற்போது தேவை சில ஆயிரம் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகளே. இதனை இறக்குமதி செய்வதன் வாயிலாக பல இன்னுயிர்களை நம்மால் காக்க முடியும். காலத்தே செய்யும் எந்த செயலும் மட்டுமே அதற்குரிய நன்மை பயக்கும். அதனால் தீவிரத்தை உணர்ந்து நோயால் அல்லல்படும் நம் மக்களின் இன்னுயிர் காக்கவும் மருத்துவ உலகிற்கு நம்பிக்கை அளிக்கவும் மேலை நாடுகளில் எளிதில் தற்போது கிடைக்கக் கூடிய இந்த உயிர்காக்கும் மருந்தாகிய 'லிபோசோமல் அம்போடேரிசின் பி' மருந்தை உடனடியாக இறக்குமதி செய்ய தங்களிடம் வேண்டுகிறேன்' என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாளை முதல் ட்விட்டர், பேஸ்புக் முடக்கமா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details