கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீன் வியாபாரிகள் சங்க தலைவர் அந்தோணி பிச்சை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," தேங்காய்ப்பட்டினம் இறைவிபுத்தன்துறை மீன்பிடி துறைமுகத்தினால் நீரோடி, மார்த்தாண்டம், வள்ளவிலை உள்ளிட்ட 15 கிராம மீனவர்கள் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாகத் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பலருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. அரசின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மோட்டார் பொருத்திய நாட்டுப்படகுகள், நாட்டுப்படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்குஞ்சுகளை, மீன் முட்டைகளை பிடிப்பதில்லை.
ஆனால் சமீப காலமாக மெக்கனைஸ்டு படகுகள் மூலமாக மீன் குஞ்சுகளையும் பிடித்து, சுற்றுச்சூழலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மாநில கடல் எல்லைகளைத் தாண்டும் போது, அந்தந்த மாநில அரசுகளிடம் உரிய அனுமதியை பெற வேண்டும். தேங்காய்பட்டணம் துறைமுகத்தை பொருத்தவரை பிற மாநிலத்தைச் சேர்ந்த மெக்கனைஸ்டு போட்டுகள், அதிக குதிரை திறன் கொண்டவையாகவும், இரட்டை மடிவலையை பயன்படுத்தி ஆழ்கடலில் மீன் பிடிப்பவையாகவும் உள்ளன. ஆகவே, பிற மாநில விசைப்படகுகளை அனுமதியின்றி தமிழ்நாடு கடல் எல்லைக்குள் அனுமதிக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வடசேரி மீன்வளத்துறை இணை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க...'பஜ்ஜி சரியில்லை' - என சொன்னவரைக் கத்தியால் வெட்டிய வடஇந்தியர்