மதுரை: இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக்கௌரவிக்கும் விழா நேற்று (ஆக.9) நடைபெற்றது.
இதில் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேசுகையில், ”இந்த நாட்டிற்கு மகாத்மா காந்தி ஏன் விடுதலை பெற்றுத்தந்தார்..? என்ற கேள்வியை எழுப்பி அதற்காக விடையைத்தேடும்போதுதான், தற்போது நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதனை உணர முடியும். மக்களே... மக்களால்... மக்களுக்காக... என்ற காந்தி கண்ட கனவு நனவாகும்வரை தியாகிகள் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.
தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் தலைவர்களைச்சந்தித்து, உள்ளாட்சிகளே தங்களது கிராமங்களை நிர்வகிக்கும் ஆட்சி முறையைப் பெற வேண்டும் என தீர்மானம் இயற்ற மனு அளிக்க வேண்டும். அப்போதுதான் அதை நோக்கிய மாற்றத்திற்கு சிறு முன்னெடுப்பையாவது செய்தவர்கள் ஆவோம்”, என்றார்.
இவ்விழாவில் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். அவர் தனது உரையில், ”பிரிட்டிஷாரின் ஆட்சியில் அவர்களை எதிர்த்துப் போராடிய தியாகிகளுக்கு அப்போதுள்ள நீதியரசர்கள் தண்டனை வழங்கினர். தற்போது விடுதலை பெற்ற இந்தியாவில் நீதிபதியாக உள்ள நான் உங்கள் அனைவரின் பாதம் பணிந்து மரியாதை செய்கிறேன். இதுதான் காலத்தை வென்றவர்களின் அடையாளமாக நான் கருதுகிறேன்.