மதுரை:ஜனார்த்தன் என்பவர் மதுரை திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “திலகர் திடல் காவல் நிலையத்தில் எனக்கு எதிராக என் மனைவி வரதட்சணை புகார் அளித்து உள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணைக்காக நான் காவல் நிலையத்தில் ஆஜரானேன். மனைவியின் புகார் தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்தாமல், காவல் ஆய்வாளர் என்னை கைது செய்து சிறையில் அடைத்தார். வழக்கு விசாரணையின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.
அந்த உத்தரவை காவல் ஆய்வாளர் விமலா பின்பற்றவில்லை. இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கெளரி அமர்வு விசாரணை செய்தது. இதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் “ஆய்வாளர் விமலா வழக்கில் தாக்கல் செய்த பதில் மனுவில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக கூறியிருந்தார்.
தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் பிரிவு இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. இப்பிரிவு 1973இல் தொடங்கப்பட்டது. முதலில் ஒரு சார்பு ஆய்வாளர், 20 காவலர்கள் இருந்தனர். சென்னை ஆயிரம் விளக்கில் 1992இல் அப்போதைய முதலமைச்சரால் பெண்களின் பாதுகாப்பை, பெண்களை வைத்து உறுதி செய்யும் பொருட்டு, முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் 222 மகளிர் காவல் நிலையங்களில் 35 ஆயிரத்து 359 பேர் பணிபுரிகின்றனர். வழக்கு விசாரணையின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அர்நேஷ்குமார் வழக்கிலும், லலித குமாரி வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவது குறித்து டிஜிபி பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், அதிகபட்சம் 7 ஆண்டுகள், அதற்கு குறைவாக தண்டனை வழங்கும் குற்றங்களில் குற்றவாளிகளை இயந்திரத்தனமாக கைது செய்யக் கூடாது. கைது செய்ய வேண்டியது தேவை, அவசியம் என்றால் மட்டுமே கைது செய்ய வேண்டும். இதை பின்பற்றாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
உச்ச நீதிமன்றம் மேலானது. அதன் உத்தரவை தமிழ்நாடு போலீஸார் பின்பற்ற வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பெண்களை பாதுகாக்கும் கேடயமாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணிக்கும் மற்றும் குற்றவாளிகளை கைது செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் அமைப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பணம், அதிகாரம் அடிப்படையில் முதலில் கைது, அடுத்து துன்புறுத்தல் என மாறிவிட்டது. தமிழ்நாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண்கள், குழந்தைகள் பயமில்லாமல், சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் தனி விசாரணை அறை, தலா ஒரு தகுதியான ஆற்றுப்படுத்துனர், சமூக ஆர்வலர், பெண் வழக்கறிஞர், பெண் மனநல மருத்துவர்களுடன் குடும்ப ஆற்றுப்படுத்தல் பிரிவு, நடமாடும் ஆற்றுப்படுத்தல் பிரிவு, பெண்கள் மேம்பாட்டு முகாம், வார இறுதி நாட்களில் திருமண பிரச்னைகளில் குடும்ப ஆற்றுப்படுத்துதல் நடத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இந்த வசதிகள் மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கியபோது இருந்தவைகள்தான். பின்னர் குறைந்துவிட்டன. எனவே, தமிழ்நாடு மகளிர் காவல் பிரிவு பொன்விழாவை சந்திக்கும் இந்த தருணத்தில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதும், தாமதம் இல்லாமல் ஆய்வாளர் விமலா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உள்ளார்.
அவர் இனிமேல் இதே போன்ற தவறுகள் புரியக்கூடாது என எச்சரிக்கிறோம். அவரது எதிர்கால நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு மனு முடிக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:அடுத்த 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியீடு!