மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள சூலப்புரம் ஊராட்சியைச் சேர்ந்த உலைப்பட்டி கிராமத்தின் மேற்குபுர மலையடிவாரத்தில் பல ஏக்கர் கணக்கில் கிமு 2000 - 3000 காலகட்டத்தைச் சேர்ந்த ஈமக்காடு பரந்து விரிந்து காணப்படுகின்றன.
முதுமக்கள் தாழிகள், கல் வட்டங்கள், குத்துக்கல், கற்பலகைகள் என இறந்தோரின் நினைவாக உருவாக்கப்படும் அனைத்து ஈம சின்னங்களும் இங்கு உள்ளன. அதுமட்டுமன்றி 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கும் உலை ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கன்னங்கரிய நிறத்திலான இரும்புக் கழிவுகள் குவியலாக காணப்படுகின்றன.
இதுகுறித்து தொல்லியல் அலுவலர் சக்திவேல் கூறுகையில், "இப்பகுதியைச் சேர்ந்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பொருளாதார உதவிப் பேராசிரியர் முமுருகேசன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வரலாற்று துறை உதவிப் பேராசிரியர் சென்றாய பெருமாள் ஆகியோர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற ஈம நடைமுறைகளை இங்கே காண முடிகிறது. இந்தப் பகுதியில் விரிவான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது மிகப்பெரிய வரலாற்று உண்மைகள் வெளியே தெரிய வாய்ப்பு உள்ளது" என்றார்.
மேற்கு மலைத் தொடரின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த மலை அடிவாரத்தில் காணும் இடம் எங்கும் தாழிகளும் பானை ஓடுகளும் ஆங்காங்கே எலும்புத் துகள்களும் பரவலாக காணப்படுகின்றன. இறந்தோர் நினைவாக அவர் பயன்படுத்திய பொருட்களை புதைத்த கலயங்கள் முழு வடிவத்தில் கிடைக்கின்றன.
இது குறித்து அருகிலுள்ள சூலப்புரம் கிராமத்திலுள்ள இந்து ஆரம்பப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அழகர்சாமி கூறுகையில், "இந்த மலை அடிவாரப் பகுதியில் ஊர்கள் இருந்ததாகவும், அங்கே மக்கள் வாழ்ந்ததாகவும் எனது முன்னோர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். இந்தப் பகுதியில் தற்போதும் பல்வேறு பழமையான பொருள்கள் கிடைத்து வருகின்றன. ஆகையால் தமிழ்நாடு அரசு மிக விரிவான அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்" என வேண்டுகோள் வைத்தார்.