தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கு மேட்டுப்பாளையம் அடுத்த தெப்பக்காடு பகுதியில் 48 நாள்கள் புத்துணர்வு முகாம் நடத்திவருகிறது. இந்த ஆண்டிற்கான முகாம் நாளை தொடங்கி 48 நாள்கள் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க மதுரையில் உள்ள அனைத்து கோயில் யானைகளும் இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி (25), திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை(12), அழகர்கோவில் கோயில் யானை சுந்தரவள்ளி தாயார் (12) ஆகிய மூன்று யானைகளும் இன்று காலை பூஜை செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு தெப்பக்காடு அனுப்பி வைக்கப்பட்டது.
வழியில் யானைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கவனிப்பதற்காக மருத்துவர் முத்துராமலிங்கம், மருத்துவர் கங்காசுதன் உள்ளிட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் உடன் செல்கின்றனர். முன்னதாக, இம்முகாமில் யானைகள் எடை, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டு முகாமில் சேர்க்கப்படுகின்றன.