அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மதுரையில் மாலை நான்கு மணியளவில் கனமழை பெய்தது. பலத்த காற்று, மின்னல், இடியுடன் பெய்த மழை ஒட்டுமொத்த மதுரையையும் பதம்பார்த்துவிட்டது. அக்னி நட்சித்திரம் முடிந்தது என மதுரை மக்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில், இந்தப் பேய்மழை மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது.
பலத்த காற்றுடன் வீசிய இம்மழையால், ஆரப்பாளையம், பொன்மேனி, மாடக்குளம், அண்ணாநகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மரங்கள் முறிந்து விழுந்தன. ஸ்மார்ட் திட்டப் பணிகளுக்காக மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றிலும் தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் மழை நீர் நிரம்பி, பள்ளம் எது சாலை எது எனத் தெரியாத அளவிற்கு மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது.
தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் வெள்ளம்போல் காட்சியளித்தது. இதன் காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் இருளில் தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.