மதுரை: சிக்கந்தர் சாவடி அருகே பெத்சான் சிறப்புப் பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் பயிலும் அறிவுசார் குறைபாடுடையோர், ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமன்றி, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.
இயல்பான விளையாட்டு வீரர்களே சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு கடுமையாக முயற்சிக்கும் நிலையில், ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் அண்மையில் நடைபெற்ற அறிவுசார் குறைபாடு உடையோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவர்கள், வாலிபால் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், மூன்று மாண்வர்கள் ஃபுட்சல் விளையாட்டில் நான்காமிடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக முதலமைச்சர் கோப்பைக்கான எறிபந்து விளையாட்டில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வென்று தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
இதுகுறித்து பெத்சான் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் ஐசக் கூறுகையில், "இதுபோன்ற சிறப்பு பள்ளிகளில் இருந்து தலா ஒருவர் பங்கேற்பதே பெரும் சவாலாக உள்ள நிலையில், பெத்சான் பள்ளியிலிருந்து 5 பேர் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். இது மதுரைக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமையாகும்.
கடந்த 2019ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்கில் 6 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இந்த ஆண்டு இந்திய அணி சார்பாக 198 வீரர்கள் ஜெர்மனி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டனர்.
அவர்களில் தமிழகத்திலிருந்து 16 பேர் இடம் பெற்றனர். மதுரை மாவட்டத்திலிருந்து ஆறு பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 5 பேர் எங்கள் பள்ளியைச் சேர்ந்தவர்களாவர். தமிழக முதல்வரால் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ள முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 28 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தின் சார்பாக எங்கள் பள்ளி வீரர்கள் 6 பேர் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு தொடர்ச்சியான பயிற்சியும் ஊக்கமும் அளித்து வந்தால், மிகப் பெரிய வெற்றியை ஈட்ட முடியும் என்பதற்கு எங்கள் பள்ளி வீரர்களே எடுத்துக்காட்டு. வருகின்ற 2027-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்கிலும், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளிலும் மதுரையில் இருந்து வீரர்கள் பங்கேற்பது மிக சாத்தியமான விசயம்தான்" என்றார்.
பெத்சான் பள்ளியின் முதல்வர் ரவிக்குமார் கூறுகையில், "சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் எங்களது மாணவர்கள் தொடர்ச்சியாக பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். ஆனால் தங்களது கடுமையான உழைப்பு, பயிற்சி மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மூலமாகத்தான் இதனை எங்கள் மாணவர்கள் பெற்றுள்ளனர்.
கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2023 வரை பதினைந்து வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தி அனுப்பியுள்ளோம். 13 பேருக்கும் மேல் பதக்கங்களை வாங்கியுள்ளனர். இதுபோன்ற குழந்தைகளை சர்வதேச போட்டிகளில் பங்கேற்கச் செய்வது பெரும் சவால். அதிலும் அவர்களை வெல்ல வைத்து பதக்கங்கள் பெறுவது அதைவிட சவாலான விசயமாகும்.