மதுரை: தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நேற்றைய முன்தினம் (மே 8) வெளியானது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தேர்வு எழுதிய 34 ஆயிரத்து 753 பேரில், 16 ஆயிரம் மாணவர்களும், 17 ஆயிரத்து 306 மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வேல்முருகன் (26) - ஆர்த்தி (19) தம்பதி. கடந்த 2021ஆம் ஆண்டில் ஆர்த்தி தனது 17வது வயதில், திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் 11ஆம் வகுப்பை முடித்துள்ளார். அப்போது, அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேல்முருகனை திருமணம் செய்துள்ளார்.
இவ்வாறு குழந்தைத் திருமணம் செய்து கொண்டதாக, இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது வரை வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, தங்களது திருமண வாழ்க்கையினால் படிப்பு கெட்டு விடக் கூடாது என்பதற்காக, வேல்முருகன் தனது மனைவி ஆர்த்தியை நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வைக்க முடிவு செய்துள்ளார்.
இதன் பேரில் திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் 11ஆம் வகுப்பு முடித்த சான்றிதழைக் காண்பித்து, 2022ஆம் ஆண்டில் பள்ளியில் சேர்த்து பொதுத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வாங்கி உள்ளார். இதனையடுத்து கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆர்த்தி, திருமங்கலம் செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியில் எழுதி உள்ளார்.