மதுரை மாநகரின் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கும், குடிநீர்த் தேவைக்கும் மதுரை வடக்கு வட்டத்தில் அமைந்துள்ள செல்லூர் கண்மாய் மற்றும் மதுரை கிழக்கு வட்டத்தில் அமைந்துள்ள வண்டியூர் கண்மாய் ஆகியவை முக்கிய நீராதாரமாகத் திகழ்கின்றன.
மதுரை மாநகருக்குட்பட்ட பகுதியில் பரப்பளவில் பெரிதாக உள்ள நீர்நிலைகளில் மாடக்குளத்திற்கு அடுத்தபடியாக செல்லூர் கண்மாயும் வண்டியூர் கண்மாயும் முக்கியமானதாகும். இக்கண்மாய்களைச் சுற்றியுள்ள கரைகளை பலப்படுத்தி, தூர்வாரி ஆழப்படுத்தவும், கரைப்பகுதிகளில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை, மேற்கண்ட இரண்டு நீர்நிலைகளையும் புனரமைக்க ரூ.7 கோடியே 13 லட்சத்து 26 ஆயிரத்து 316 செலவில் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. செல்லூர் கண்மாய்க்கு 4 கோடியே 59 லட்சத்து 45 ஆயிரத்து 26 ரூபாயும், வண்டியூர் கண்மாய்க்கு 2 கோடியே 53 லட்சத்து 81 ஆயிரத்து 290 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி இறுதி ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படவுள்ளது.