கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சை அளித்துவருகிறது. நாள்தோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ராஜாஜி மருத்துவமனை நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவு உள்ளிட்டவை வழங்கி சிகிச்சையளிப்பதில் மற்ற மருத்துவமனைகளைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது.
இந்நிலையில், கரோனா நோயாளிகளில் தீவிர மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு கழிவறையில் ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது குறித்து மருத்துவமனை முதல்வர் சங்குமணி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில், பெருந்தொற்று காலத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை மிக சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
மருத்துவமனை முதல்வர் சங்குமணி பேட்டி நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்ற தங்களின் உயிரை பணயம் வைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கரோனா தொற்றால் மிதமாகவும், சற்று மிதமாகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கழிவறைக்குச் செல்லும்போது மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு கழிவறையிலேயே ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்படுபவர்கள் இதயம் மற்றும் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் அவர்களுக்கு இந்த ஆக்சிஜன் மிகப்பெரிய பாதுகாப்பு அளிக்கிறது. 98-99 என்ற அளவுதான் சரியான ஆக்சிஜன் அளவாகும். இந்த அளவை தெடார்ந்து நோயாளிகள் பெறுவதற்காகதான் கழிவறையிலும், ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் உள்ள 15 கழிவறைகளிலும் இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் பணியாளர்களும் உள்ளனர். விமானத்தில் இருப்பதைப் போன்ற அமைப்பில்தான் இந்த ஆக்சிஜன் குழாய் இயங்குகிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கழிவறையில் ஆக்சிஜன் கொடுப்பது வழக்கமாக உள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் இந்த முறையை நமது மருத்துவமனைகளுக்கும் கொண்டுவரவேண்டும் என்ற அடிப்படையில் இதை அனுமதித்துள்ளனர். சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அடுத்தப்படியாக தென் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இதுதான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:கிண்ணிமங்கலம் தமிழிக் கல்வெட்டு கிமு 2 - 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது - தமிழக தொல்லியல் துறை