தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி.. இனி பயண நேரம் குறையும்! - southern railway

மதுரை ரயில் நிலையத்தில் தடையற்ற ரயில் போக்குவரத்து நடைபெறும் வகையில் ரயில் பாதை இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரையில் ரயில் பாதை
மதுரையில் ரயில் பாதை

By

Published : Jan 23, 2023, 8:18 PM IST

மதுரை:மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், "மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை பணிகளில் மதுரை - திருமங்கலம் மற்றும் மீளவிட்டான் - தூத்துக்குடி பிரிவுகள் தவிர மற்ற பகுதிகளில் இரட்டை ரயில் பாதைப்பணிகள் முடிவடைந்து, ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தற்போது மதுரை - திருமங்கலம் பிரிவில் இரட்டை ரயில் பாதை பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதற்காக மதுரையில் ரயில் பாதை இணைப்பு பணிகள் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த இணைப்பு பணிகள் 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

மதுரையில் 9 மற்றும் 10ஆவது தண்டவாளப்பகுதி மற்றும் போடி நாயக்கனூர் ரயில் பாதை பகுதியில் உள்ள ரயில் பெட்டிகள் நிறுத்தும் தண்டவாளங்கள் ஆகியவற்றில் மின்மயமாக்கல் பணிகள், ரயில் பெட்டி பராமரிப்பு மைய தண்டவாளங்களில் மின் மயமாக்கல் பணிகள், எட்டு மற்றும் 9வது தண்டவாளங்களில் ரயில் புறப்படுவதற்கான சிக்னல் அமைப்பு, 10வது ரயில் பாதை 445 மீட்டரில் இருந்து 610 மீட்டராக அதிகரிப்பு, நடைமேடைகள் நீளம் எண் 1, 2-3, 4-5 முறையே 617, 625, 617 மீட்டராக அதிகரிப்பு, ரயில் இன்ஜின்கள் நிறுத்துவதற்குத் தனி ரயில் பாதை, ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாதையில் ரயில் பெட்டிகள் ஷண்டிங் செய்யும் வசதி, கூடல் நகர் செல்லும் ரயில் பாதையில் வழக்கமான ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் ரயில் பெட்டிகள் ஷண்டிங் செய்ய 60 மீட்டர் நீளத்திற்கு ரயில் பாதை நீட்டிப்பு, தற்போதைய மின் தடங்களை வசதிக்கேற்ப மாற்றி அமைத்தல், நான்கு புறமும் ரயில்களையே ஒரே நேரத்தில் நடைமேடைகளுக்குள் கொண்டுவர பத்துக்கும் மேற்பட்ட பாயிண்ட்களை மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற இருக்கின்றன.

இதன் மூலம் கூடல் நகர், திருப்பரங்குன்றம், சிலைமான், உசிலம்பட்டி போன்ற ரயில் நிலையங்களிலிருந்து வரும் ரயில்களை மதுரைக்கு வெளியே நிறுத்தாமல் ஒரே நேரத்தில் நடைமேடைகளுக்குக் கொண்டு வரும் வசதி கிடைக்கும். மதுரை ரயில் நிலையத்தில் நெருக்கடிகளைத் தவிர்த்து ரயில்களைக் கையாள எளிதாக இருக்கும். மதுரையில் இருக்கும் பத்து ரயில் பாதைகளிலும் ரயில்களை நிறுத்தாமல் செலுத்தும் வசதி உருவாகும்.

திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களில் ரயில்கள் காத்திருக்க வைப்பது தவிர்க்கப்படும். பயணிகள் ரயில்களைக் கையாள ஏழாவது நடைமேடை ஒன்று உருவாக்கப்படும். ரயில்கள் காலதாமதம் இல்லாமல் இயங்க வழிவகை செய்யும். கூடல் நகர், சமயநல்லூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களில் சரக்கு ரயில்கள் காத்திருப்பது தவிர்க்கப்படும்.

ரயில் இன்ஜின்கள் நிறுத்த தனி ரயில் பாதை கிடைக்கும். அனைத்து பணிகளும் நிறைவடைந்து மார்ச் மாத இறுதியில் இரட்டை ரயில் பாதை போக்குவரத்துக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை கோட்ட ரயில்வே வருமானம் 80% அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details