கரோனா தொற்றை தடுக்க தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் பயணிகளின் பயணச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை தொடாமலேயே பரிசோதிக்கும் முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது பயணிகள் ரயில் இயக்கப்படாததால் முன்பதிவு செய்த நபர்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுடைய பயணச்சீட்டு, அடையாள அட்டை ஆகிவற்றை நுழைவு வாயில் அருகிலேயே பயணச்சீட்டு பரிசோதகர்கள் சோதனை செய்கிறார்கள். அதற்காக பயணிகள் பக்கம் வெப்கேமராவுடன் கூடிய கம்ப்யூட்டர் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
பயணிகளின் பயணச் சீட்டையும், அடையாள அட்டையையும் அந்த வெப் கேமராவில் காண்பித்தவுடன் மறுபக்கத்தில் உள்ள பயணச்சீட்டு பரிசோதகர் கம்ப்யூட்டர் திரையில் தெரியும் விவரங்களை வைத்து பயணியை ரயில் நிலையத்திலும், ரயிலிலும் பயணம் செய்யவும் அனுமதிக்கின்றனர்.
தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட இந்த முயற்சியை பொதுமக்கள் உள்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த வசதி மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் உத்தரவின் பேரில் முதுநிலை கோட்ட தொலைத்தொடர்பு பொறியாளர் கங்குல சுமன் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளார்.