மதுரை: பெங்களூரில் தங்கியிருந்த மதுரை தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமியை (வயது 55) தமிழக கும்பல், நேற்று (செப். 4) மாலை கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
யார் இந்த வி.கே.குருசாமி? குருசாமிக்கும், ராஜபாண்டிக்கும் இடையே உள்ள பிரச்சினை என்ன?
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் வி.கே.குருசாமி. இவர் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராகவும், கிளைச் செயலராக இருந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க முன்னாள் மண்டல தலைவர் மறைந்த ராஜபாண்டி.
2001 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போஸ்டர் ஒட்டியதில் இருதரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது தொடங்கிய பிரச்சனை இன்னும் ஓயவில்லை. இரு குடும்பத்தினரிடையே உள்ள முன் பகை காரணமாக பழிக்குப் பழி வாங்கும் சம்பவமாக இதுவரை 15 க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் மதுரையில் அரங்கேறியுள்ளன.
பழிவாங்கும் நோக்கில், 2016 ஆம் ஆண்டு குருசாமியின் மருமகன் முத்துராமலிங்கம் ராஜபாண்டி தரப்பினரால் கொலை செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, முத்துராமலிங்கம் மரணத்திற்கு பழிக்குப்பழியாக குருசாமி தரப்பினரால் 2017 ஆம் ஆண்டு ராஜபாண்டி மகன் முனியசாமி கொலை செய்யப்பட்டார்.
அதனைதொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு தேர்தல் பணியின்போது குருசாமி மருமகன் எம்.எஸ்.பாண்டி ராஜபாண்டி தரப்பினரால் கொலை செய்யப்பட்டார். மேலும், ராஜபாண்டி தரப்பினர் குருசாமியையும், அவரது மகன் மணியையும் பழிவாங்க தொடர்ந்து திட்டம் வகுத்தனர்.
இந்நிலையில், கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தாலும் அடுத்தடுத்த நபர்கள் கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு குருசாமி தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல், ராஜபாண்டி தரப்பு நபரான கீழ்மதுரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், முனியசாமி ஆகிய இருவரையும் கொலை செய்ய முயன்றபோது இருவரும் தப்பியோடினர்.
அதனைத்தொடர்ந்து, அவர்களோடு வந்த மற்றொரு நபரான உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞர் சிக்கியதால், ஆத்திரத்தில் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். காவல்துறை தேர்வுக்காக முருகானந்தம் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்தக் கொடூரமான கொலைச் சம்பவம் போக்குவரத்து சிக்னல் அருகே நடைபெற்றதால், கொலையின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
திமுக,அதிமுக பிரமுகர்களின் பழிக்குப் பழி கொலை சம்பவங்களால் மதுரையில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 15க்கும் மேற்பட் கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கூட இதுபோன்ற ஒரு கொலைச்சம்பவம் தொடர்பாக வி.கே.குருசாமி மீது குற்றம்சாட்டி வழக்கும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வி.கே.குருசாமி மற்றும் அவரது நண்பர்களால் முன் விரோதம் மற்றும் அரசியல் காரணமாகவே இக்கொலைகள் பலவும் நடைபெற்றுள்ளன. இவற்றை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறை பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டது. அண்மைக் காலமாக இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்ற நிலையில் தற்போது, பெங்களூரில் தங்கியிருந்த வி.கே.குருசாமியை ராஜபாண்டி தரப்பினர் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மனோஜ் பாரதிராஜா படத்தில் மீண்டும் இணையும் பாரதிராஜா - இளையராஜா கூட்டணி!