மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உடல் நலக்குறைவு - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பார்வதி என்கிற 27 வயது பெண் யானை, கோவில் வளாகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த யானை 2000ஆம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசத்தில் இருந்து வாங்கப்பட்டது. கோயில் திருவிழாக்களில் சாமி ஊர்வலத்தின்போது பார்வதி யானை பங்கேற்று வந்தது. 2015ஆம் ஆண்டு கோயில் திருவிழா ஊர்வலத்தின்போது யானைக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அப்போது மருத்துவர்கள் யானையை கவனமுடன் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பார்வதி யானைக்கு இரண்டு கண்களிலும் புரை பாதிப்பு ஏற்பட்டது. முதலில் சென்னையில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். பின்னர் தாய்லாந்தில் இருந்து வந்த மருந்துவக்குழுவினர் நேரில் வந்து சிகிச்சை அளித்தனர். மேலும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் யானையின் உடல்நிலையை பார்வையிட்டு தேவையான சிகிச்சை வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது யானைக்கு கடந்த ஒரு வாரமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளத்தாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் யானை சரிவர உணவும் எடுத்துக்கொள்ளாததால் உடல் சோர்வடைந்து காணப்படுகிறது. இதனால் எழுந்து நடக்க முடியாமல் படுத்தநிலையிலேயே உள்ளது. இதனால் யானையை ஒரு வாரமாக நடைபயிற்சிக்கும் அழைத்துச்செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் உடல்நலக்குறைவு காரணத்தால் 4890 கிலோ எடையிருந்த பார்வதி யானை தற்போது உடல் எடையும் குறைந்து வருகிறது. பார்வதி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோயில் வளாகத்தில் நடைபெறும் மாசி திருவிழாவில் பங்கேற்க பார்வதி யானைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை வன விலங்கியல் மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழு பார்வதி யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு