மதுரை:தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாறு அரை நூற்றாண்டைக் கடந்துள்ள நிலையில், மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் ஆளுகின்ற பாஜக அரசுகள், அவ்வப்போது தொடர்ந்து பல்வேறு வகையிலும் இந்தித் திணிப்புகளை மேற்கொண்டு வருவதாக தொடர்ந்து தமிழ்நாட்டின் மாநில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்தோடும், நிதி உதவியோடும் இயங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசு நிதி உதவியோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சமர்த்' எனும் கல்வித் திட்டத்தின் கீழ் உள்ள படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விண்ணப்ப விபரங்களில் தமிழ் இடம் பெறவில்லை. அதேநேரம் ஆங்கிலமும், இந்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும், இது குறித்து அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விக்கி கண்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் குறித்து இரண்டு புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. பல்கலைக்கழகம் சார்பாக 'சமர்த்' என்ற புதிய வலைதளம் ஒன்று கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் மாணவர், பெற்றோர் மற்றும் சுயவிபரங்கள் குறித்த தகவல்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யும் வகையிலேயே ஆன்லைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இடம் பெறவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தொடர்ந்து, குறிப்பிட்ட வலைதளத்தை நாங்கள் ஆய்வு செய்தபோது, சுயவிபரங்களை இந்தியில் பதிவு செய்க எனக் குறிப்பிட்டே அந்தத் தளம் தொடங்குகிறது. அதில் அடிப்படைத் தகவல்களை இந்தியில் மட்டுமே குறிப்பிட முடியும் என இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இது போன்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை வடிவமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையை புறக்கணிக்கும் செயலாகும். அதேநேரம், காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கான தேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்த நிலையில், இந்த ஆண்டு எந்த வித முன் அறிவிப்பும் இன்றி அவை குறைக்கப்பட்டுள்ளன.