மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள், வருகிற 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இதுவரை 12 ஆயிரத்து 176 காளைகளும், 4 ஆயிரத்து 514 மாடு பிடி வீரர்களும் களத்தில் விளையாடத் தங்களை பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, தைத்திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், காளைகளும், மாடுபிடி வீரர்களும் தங்கள் பெயர்களை இணையதளத்தில் ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.10) பிற்பகல் தொடங்கிய பதிவு, நேற்று (ஜன.11) பிற்பகல் வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன்படி, வரும் ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில், 2 ஆயிரத்து 400 காளைகளும், ஆயிரத்து 318 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். அதேபோன்று, 16ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறவுள்ள போட்டியில் 3 ஆயிரத்து 677 காளைகள் மற்றும் ஆயிரத்து 412 மாடு பிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 6 ஆயிரத்து 99 காளைகளும், ஆயிரத்து 784 மாடு பிடி வீரர்களும் என மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் மொத்தம் 12 ஆயிரத்து 176 காளைகளும், 4 ஆயிரத்து 514 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2 ஆயிரத்து 331 காளைகளும், ஆயிரத்து 379 மாடு பிடி வீரர்களும், பாலமேடு ஜல்லிக்கட்டில் 2 ஆயிரத்து 170 காளைகளும், ஆயிரத்து 849 மாடு பிடி வீரர்களும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 5 ஆயிரத்து 200 காளைகளும், 2 ஆயிரத்து 171 மாடு பிடி வீரர்களும் என மொத்தம் 9 ஆயிரத்து 701 காளைகளும், 5 ஆயிரத்து 399 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாடு பிடி வீரர்கள் மாடுகளால் குத்தப்பட்டு காயம்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு மாட்டின் கொம்புகளிலும் ரப்பர் குப்பிகள் பொருத்த மாவட்ட நிர்வாகமும், விலங்குகள் நலத்துறையும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இந்த முயற்சிக்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க:வெளியூரில் பணிபுரியும் பெண்களுக்கு, தமிழக அரசின் 'தோழி விடுதி'; என்ன அம்சங்கள் உள்ளது? வாங்க பார்க்கலாம்..