தூத்துக்குடியைச் சேர்ந்த கே.செல்லம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதுதவிர காற்றாலை அமைக்கவும், ரயில் பாதை அமைக்கவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு திட்டங்களுக்காக இதுவரை இந்தப் பகுதியில் 1500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சிப்காட் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் காலியாகவே உள்ளது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் அலுவலர்கள் கடந்த மே 6ஆம் தேதி தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்திற்கு வந்து விவசாயிகளிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற்றதோடு, இழப்பீடு பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட், டிசிடபிள்யூ உள்ளிட்ட பல வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விநியோகம் செய்வதற்காக பூமிக்கடியில் இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்க இருப்பதாகவும், அதற்காக நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆறுகள், கால்வாய்கள், சாலைகள், வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் பத்து கிலோமீட்டர் தொலைவு ஆகிய பகுதிகளில் இந்த குழாய் அமைக்கப்பட உள்ளது.