மதுரை:மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளன.
இந்த நிலையில் மலைக்குப்போகும் பாதையில் நெல்லித்தோப்பு எனும் பகுதியில் ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கோயிலுக்குச் செல்லக்கூடிய பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்டவற்றை செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று(ஜூன் 28) நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், மலைக்கு மேல் தானே தர்காவும் அமைந்துள்ளது, அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என கருத்து தெரிவித்தனர். மேலும், திருப்பரங்குன்றம் மலையின் மேல் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.