மதுரை:கரூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை எம்.ராமசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா அத்திபாளையத்தில் 2011- 2021 வரை பத்தாண்டுகள் பட்டா நிலத்தில் கல் குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தேன்.
குவாரி உரிமம் காலாவதியாக ஒரு மாதம் இருந்த நிலையில் நிலத்தைக் கண்ணப்பன் என்பவருக்கு விற்றேன். பின்னர் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்தேன். இந்நிலையில், நான் நடத்திய குவாரியில் சட்ட விரோதமாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறி எனக்கு ரூ.15.55 கோடி அபராதம் விதித்து கரூர் கோட்டாட்சியர் 12.7.2023ல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. இதனால் அபராதம் விதித்து கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் தெரிவிக்கும் போது, ''மனுதாரர் முன்னாள் அமைச்சரின் தந்தை என்பதால் அரசியல் காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் குவாரி நிலத்தை விற்ற நிலையில், அதை வாங்கியவர் சட்டவிரோத குவாரி நடத்தி வந்தார். இது தொடர்பாக மனுதாரர் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்றார். தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் தெரிவிக்கும் போது, "மனுதாரர் நடத்திய குவாரியில் புகளூர் வட்டாட்சியர் ஆய்வு நடத்தி பெரியளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.