மதுரை:கரூர் மாவட்டம் சவரிமேடு கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “என் மகள் (16) கடந்த மே 25ல் திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் கிணற்றில் அவரது உடல் கிடந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் விதிகளை பின்பற்றாமல் உடற்கூராய்வு செய்துள்ளனர். என் மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் என் மகள் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது. எனவே, விதிகளை பின்பற்றி மறு உடற்கூராய்வு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் உடற்கூராய்வு செய்த போது பதிவான சிசிடிவி காட்சிப் பதிவுகளை மனுதாரருக்கு வழங்க வேண்டும். அதைப் பார்த்து மனுதாரர் தரப்பில் பதலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
ஆனால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வீடியோ பதிவு மனுதாரரிடம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, திருச்சி மருத்துவ கல்லூரி முதல்வர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று நீதிபதி இளங்கோவன் முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மருத்துவ கல்லூரி முதல்வர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், எதிர் மனுதாரர் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீசார் தரப்பில் விண்ணப்பம் கொடுக்கப்படவில்லை. எனவே நாங்கள் வீடியோ பதிவு செய்யவில்லை என தெரிவித்தார்.