தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இல்லாத கரோனாவுக்கு 8 லட்சம் வசூலித்த மருத்துவமனை; உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! - கரோனாவுக்கு கூடுதல் பணம் வசூலித்த மருத்துவமனை

மதுரை: இல்லாத கரோனாவுக்கு சிகிச்சை என்ற பெயரில் ரூ. 8 லட்சம் வசூல் செய்த தனியார் மருத்துவமனையின் மோசடி குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

corona treatment amount forgery  madras high court madurai bench
இல்லாத கரோனாவுக்கு 8 லட்சம் வசூலித்த மருத்துவமனை; உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

By

Published : Sep 26, 2020, 11:01 PM IST

மதுரை ராஜாமில் பகுதியைச் சேர்ந்த நேரு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "நானும் எனது மனைவியும் காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக மதுரையில் ராஜ்குமார் என்ற மருத்துவர் நடத்திவரும் என்.டி.சி மருத்துவமனையில் ஜூலை 7ஆம் தேதி சிகிச்சைக்குச் சேந்தோம். எங்களுக்கு கரோனா அறிகுறி இருப்பதால் சிகிச்சை முன்பணமாக ரூ.8 லட்சம் செலுத்துமாறு கூறினர்.

கரோனா தொற்றின் மீது ஏற்பட்ட அச்சம் காரணமாக ரூ.5 லட்சத்தை ரொக்கமாகவும் ரூ.3 லட்சத்தை கிரடிட் கார்டு வழியாகவும் செலுத்தினோம். கரோனா பரிசோதனையில் எங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஜூலை 10ஆம் தேதி இருவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டோம். இருவருக்குமான சிகிச்சை கட்டணமாக ரூ. 65,840க்கு ரசீதையும் 1.05 லட்சம் ரூபாயையும் திரும்பத் தந்தனர்.

மீதமுள்ள பணத்தை திரும்பத் தரவில்லை. இதுதொடர்பாக அலுவர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீதிப்பணத்தை திரும்ப வழங்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடவேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, "மனுதார் மற்றும் அவரது மனைவிக்கும் சிகிச்சைக் கட்டணமாக மூன்று லட்சம் மட்டுமே வாங்கினோம் என மருத்துவமனை கூறுவதை ஏற்க முடியாது.

மருத்துவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பாணையில் மருத்துவர்கள் தொழிலில் கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள் தொழில் நல்நடத்தையுடன் இருக்க வேண்டும்" என்றார்.

மேலும், "மனுதாரர் மோசடி குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மனுதாரரின் புகார் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தகுதி மற்றும் சட்டப்படி விசாரணை நடத்தி 16 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம் - சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details