மதுரை:நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் "தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதி பஞ்சாயத்து நிர்வாக இளநிலை உதவியாளராக மனுதாரர் பணியாற்றி வருவதாகவும், இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் எனக்கு வழங்க வேண்டிய உரியப்பணி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எனக்கு பணி வழங்கி, பணி நீக்கம் செய்யப்பட்ட இடைப்பட்ட காலத்திற்கு 25% ஊதியம் வழங்கவும் கடந்த 2020ஆம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவு தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை, எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் IAS ஆட்சி பணி மூத்த தலைமை அதிகாரி எதிர்மனுதாரராக இருந்தும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போது வரை எந்தவித பதில் மனுவோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை. இதிலிருந்து நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஆச்சரியமாகவும், விசித்திரமாகவும் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா (அப்போதைய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.