மதுரை:மதுரை, வண்டியூர் கண்மாய் 575 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது, ஆக்கிரமிப்புகள் காரணமாகக் கண்மாய் 400 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. இந்த கண்மாய்க்கு 3 ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன. கே.கே.நகர், மேலமடை, கோமதிபுரம், பாண்டிகோவில், கருப்பாயூரணி, யாகப்பாநகர், மாட்டுத்தாவணி, லேக்வியூ மற்றும் வண்டியூர் பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் வண்டியூர் கண்மாயைச் சார்ந்துள்ளது.
வண்டியூர் கண்மாயைச் சரியாகப் பராமரிப்பது இல்லை. இதனால், வண்டியூர் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாயை ஆழப்படுத்திப் பராமரிக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. அண்மையில் வண்டியூர் கண்மாய் பராமரிப்புக்கு மாநகராட்சி ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது. இந்நிலையில், மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோமதிபுரம் பெட்ரோல் நிலையம் வரை 2.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.150.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியைத் தமிழக நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது.
அதேபோல், தென்கால் கண்மாயில் விளாச்சேரி மெயின் ரோட்டில் இருந்து மதுரை- திருமங்கலம் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது. எனவே, வண்டியூர் கண்மாய் மற்றும் தென்கால் கண்மாயில் மேம்பாலம் கட்ட தடை விதிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே, இந்த மனுக்கள் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்த போது இரண்டு நீதிபதிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்து நிலவியது. இதில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை விதித்தார். நீதிபதி புகழேந்தி கட்டுமான பணிக்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறி உத்தரவிட்டு இருந்தனர். மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு மூன்றாவது ஒரு நீதிபதிக்காகத் தலைமை நீதிபதி முடிவு செய்யலாம் என கூறியிருந்தார்.