தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பண மோசடியில் ஈடுபட்ட செந்தூர் பின் கார்ப் உரிமையாளர் வழக்கு: நிபந்தனையின் கீழ் ஜாமீன் வழங்கிய நீதிபதி!

அதிக வட்டி தருவதாகக் கூறி நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட செந்தூர் பின் கார்ப் உரிமையாளர் பாரதி ஜாமீன் கோரிய வழக்கில், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளின் அசல் ஆவணச் சான்றுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 17, 2023, 5:13 PM IST

மதுரை: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர், முத்துராமலிங்கம் - பாரதி தம்பதியினர். இவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் செந்தூர் பின் கார்ப் உள்ளிட்டப் பல பெயரில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் பணம் முதலீட்டு கம்பெனியை நடத்தி வந்துள்ளார்.

இவர்களிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் தினந்தோறும் முதலீடு செய்பவர்களின் வங்கிக் கணக்கிற்கு 900 ரூபாய் பணம் வழங்குவதாகவும்; பின்னர் 12 மாதங்கள் கழித்து முதலீடு தொகையுடன் அதிக ஊக்கத்தொகை சேர்த்து வழங்கப்படும் எனவும் கூறி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அது மட்டுமின்றி, பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்பையும் அவர்கள் தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர். இதைக் கண்டு ஆர்வம் கொண்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் பேராசையால், சுமார் பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீட்டாளருக்கு உரிய பணத்தை திரும்பக் கொடுக்காமல் செந்தூர் பின் கார்ப் உரிமையாளர் பாரதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக முத்துராமலிங்கம், மற்றும் அவரது மனைவி பாரதி உள்ளிட்டோர் மீது புகார்கள் எழுந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி பாரதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், "மனுதாரர் மற்றொரு நபரோடு இணைந்து 4 கோடியே 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் நான்கு நபர்கள் 10 கோடிக்கும் அதிகமாக மனுதாரரிடம் வழங்கியுள்ளனர். இதன்மூலம் மனுதாரர் ஏராளமான நபர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரிய வருகிறது.

இருப்பினும், மனுதாரர் தரப்பில் வழங்கப்பட்ட உறுதிகள் மற்றும் மனுதாரர் சிறையில் இருக்கும் காலத்தை கருத்தில் கொண்டு, மனுதாரர் அவரது பெயரிலோ, அவரது உறவினர் அல்லாது நண்பர்களின் பெயரிலோ அவருக்குச் சொந்தமாக உள்ள 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, சொத்து மதிப்பிற்கான சான்றிதழ் உடன் இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், மறு உத்தரவு வரும்வரை திருச்சி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காலை 10.30, மாலை 05.30 மணி என இருவேளை கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கவோ, அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது. தலைமறைவாகக் கூடாது’’ உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் அவரது ஜாமீனை ரத்து செய்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பாஜக மாநிலச்செயலாளர் அர்த்த ராத்திரியில் கைது; அண்ணாமலை கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details