மதுரை:தேவர் குருபூஜை விழாவிற்கு செல்ல தமிழ்நாடு அரசு சார்பில் 500 அரசு பேருந்துகள் சிறப்பாக இயக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க உத்தரவிட கோரி, உசிலம்பட்டி வழக்கறிஞர் சங்கிலி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 30 தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை நடைபெற உள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவு ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள தேவர் சிலைக்கு அனைத்து கட்சித் தலைவர்கள், பெரியோர்கள் மற்றும் சமுதாய மக்கள் மரியாதை செலுத்துவார்கள். இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தர உள்ளனர். சொந்த வாகனம் இல்லாதவர்கள் வாடகை வாகனங்கள் மூலம் பசும்பொன் கிராமத்திற்கு வந்து மரியாதை செலுத்த வாடகை வாகனங்கள் மூலம் வருவதற்கு காவல்துறையிடம் மனு அளித்தோம்.
ஆனால், அனுமதி மறுக்கபட்டது. எனவே, பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள வாடகை வாகனங்கள் மூலம் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என தனது மனு தாக்கல் செய்திருந்தார்.