மதுரை:கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழா (Masi Mahamaham festival) வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த 2023-ல் மார்ச் 6ஆம் தேதி கும்பகோணம் மாசி மகாமக திருவிழா நடைபெற உள்ளது.
இதற்காக கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் ஆலயங்கள், 5 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. மாசி மகாமக திருவிழாவின் போது, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கும்பகோணத்திற்கு பல லட்சம் பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள். இந்த மாசி மகாமக திருவிழாவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று விழா.
கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவில் சட்ட விரோத செயல்களை தடுக்க கும்பகோணம் மற்றும் அதன் சுற்றியுள்ள டாஸ்மார்க் கடைகளை மூடவும் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என 2021-ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், இதுவரை மாசி மகாமக திருவிழாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. எனவே, கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவில் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும், உள்ளுர் விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு நேற்று (பிப்.22) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாக இதுவரை எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் மேலும், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய எட்டுக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கோயில் திருவிழாவுக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவதாக மனுதாரர் தெரிவிக்கிறார். எனவே, கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்ககளை கருத்தில் கொண்டு திருவிழா நடைபெறும் நாளில் மதுபான கடைகளை திறப்பதற்கான கால அவகாசங்கள் குறைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: "ஆர்எஸ்எசின் பிரசார பீரங்கி ஆளுநர் ரவி" - துரை வைகோ!