மதுரை:தஞ்சாவூரை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், "எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் ஒரு ஜவுளிக்கடையில் கடந்த மூன்று வருடங்களாக பணிபுரிந்து வந்தார்.
அக்கடையின் உரிமையாளர் கார்த்திக்கின் நண்பர் சின்னப்பா என்பவர் நவம்பர் 7 அன்று தீபாவளி விருந்து எனக் கூறி, அவரது வீட்டிற்கு எனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். அன்று மதியம் 3 மணிக்கு வீடு திரும்பிய எனது மகள் மயக்க நிலையில் இருந்ததோடு, அவருக்கு அதிக ரத்தப்போக்கும் ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என மருத்துவர்கள் கூறினர்.
பணபலமிக்க குற்றவாளிகளை தண்டியுங்கள்; தாயின் குமுறல்:இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சின்னப்பா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் கார்த்திக் உட்பட பலருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. ஆனால், மற்றவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கைகள் இல்லை. மற்ற குற்றவாளிகள் பணபலம் மிக்கவர்கள். எனவே, எனது மகளுக்கு உரிய நீதி கிடைக்க அனைத்து குற்றாவளிகளையும் கைது செய்து உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும்" என அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் இந்த வழக்கினை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும், இழப்பீடாக 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர். இவ்வழக்கில் 2019 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தவிட்டும் இன்று வரை ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி பாதிக்கப்பட்டவரின் தாயார் புதிய வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமிநாராயணன் முன்பு இன்று (அக்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை நிறைவேற்றாமல் மனுதாரர்களை ஏன் நீதிமன்றத்திற்கு வரவைத்து அலைக்கழிக்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இழப்பீடு ஏன் இன்னும் வழங்கவில்லை என அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:நடிகை ஜெயப்பிரதா வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! என்ன செய்யப் போகிறார் ஜெயப்பிரதா?