மதுரை:தோட்டப் பயிர்கள் செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க விவசாயிகள், விவசாய அதிகாரிகள் ஆகியோரைஒன்றிணைத்து தனி குழு நியமித்து விவசாயப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய கோரிய வழக்கு விசாரணையில், தமிழ்நாடு விவசாயத்துறை செயலர் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் தகவல் பெற்று பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் பகுதிகளில் நீர்பாசனம் இல்லாத நன்செய், புன்செய் நிலங்களில் தோட்டப் பயிர் விவசாயம் அதிக அளவில் செய்யப்படுகிறது.
அதேபோல், இந்த மாவட்டங்களிலுள்ள மலைப்பகுதிகளிலும் தோட்டப் பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் தரக்கூடியது இந்த தோட்டப் பயிர்களே ஆகும். நிரந்தர நீர்ப்பாசன வசதி இல்லாத காரணத்தால் இந்த பயிர்களை விவசாயம் செய்ய சிலர் பேர் பம்புசெட் மூலம் பலர் ஆயில் இன்ஜின் வைத்து அதிக விலையில் டீசல் வாங்கி விவசாயம் செய்கிறார்கள்.
குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம்:ஆனால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அறுவடை நேரங்களிலும் கட்டுப்படியான விலை கிடைக்காமல் உள்ளது. மேலும், காய்கறிகளை இடைத்தரகர்களும், வியாபாரிகளும் மிகக்குறைந்த விலையில் வாங்கி மிக அதிக லாபத்தில் மார்க்கெட்களிலும், கடைகளிலும் விற்பனை செய்கிறார்கள். இதனால், பொதுமக்களும் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
நஷ்டத்தில் விவசாயிகள்: மத்திய மாநில அரசுகள் கரும்பு, நெல் மற்றும் பயிறு வகைகளுக்கு (MSP) குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆண்டுதோறும் நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது. ஆனால் தோட்டப் பயிர்களான காய்கறிகள், பழங்கள், மலர்கள், தேங்காய், கடலை, பருத்தி, வத்தல் போன்றவைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் தோட்டப்பயிர்கள் செய்யும் விவசாயிகள், காய்கறிகள், தேங்காய், கடலை போன்றவைகளை நஷ்டத்தில் விற்று வருகின்றார்கள்.
காய்கறிகளை கொட்டிச் செல்லும் அவலம்:சில நேரங்களில் விலை நிர்ணயம் செய்யாததால் ஒரே தோட்டப் பயிரை பலர் செய்து தாங்கள் விளைவிக்கும் தக்காளி, கத்தரி மற்றும் மற்ற காய்கனிகளை நடுரோட்டிலும், நீர் நிலைகளிலும் கொட்டுகிறார்கள். விலை இல்லாத காரணத்தால் விளைவித்த காய்கறிகளை வயலிலேயே உழுது உரமாக்கி விடுகின்றார்கள். சில நேரங்களில் காய்கறிக்கு எடுப்பு கூலிக்கூட விலை கிடைக்காத நிலை உள்ளது.