மதுரை:மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று (நவ.24) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் தொடங்கிய இக்கூட்டத்தில், மேலூர் ஒரு போக பாசனப் பகுதி மற்றும் உசிலம்பட்டி கால்வாய் பகுதிகளில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் அதிகரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வந்த பின்பாக உரிய முடிவு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் அமைச்சர்களுடனான நிகழ்ச்சிக்குச் சென்று விட்டதால் தாமதமாக வந்துள்ளார். இதனால் விவசாயிகளை அவதிமதித்தாகக் கூறி ஒரு தரப்பினர் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதனைத் தொடர்ந்து மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பின்பாக மாவட்ட ஆட்சியர் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆட்சியர் சங்கீதவிடம், மேலூர் விவசாயிகள் தங்களது பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தபோது, “தற்போது தண்ணீர் திறந்து விட்டால், டெல்டா பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு போல தண்ணீர் வந்தவுடன், எங்களிடம் நஷ்ட ஈடு கேட்பீர்கள். அதனால் தற்போது தண்ணீரைத் திறந்து விட முடியாது” என ஆட்சியர் கூறியதாக கூறப்படுகிறது.