மதுரை:தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2018 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதிய ஜனதாவின் தலைவரும், தற்போதைய புதுவை, தெலுங்கானாவின் கவர்னருமான தமிழிசையும் பயணம் செய்தார்.
அந்த விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன்.
இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணை செய்தும் நிலுவையில் இருந்தது. இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார் தாரரான தமிழிசை, தற்போது தெலுங்கானா மாநில கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஒரு தரப்பினராக சேர்க்க கோரி தாக்கல் செய்து அண்ணாமலையும் ஒரு மனுதாரராக உள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்பு நிதி இந்த வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர். இது சென்னை, கோவை, மதுரை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும்.
தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை என வாதிட்டு இருந்தார். இதனை பதிவு செய்த நீதிபதி தனபால், சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், ’பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என்ற கோஷம் குற்றமாகாது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக தனது ‘X' வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள லூயிஸ் சோபியா, “கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு உயர் நீதிமன்றம் என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், இது குறித்து அறிக்கை ஒன்றையும் சோபியா வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “என் மீதான முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை கிளை) இன்று அளித்த தீர்ப்பு, எனது 5 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என்ற நான்கு வார்த்தைகளை தமிழிசை சௌந்தரராஜனின் செவிகளில் கேட்கும் அளவுக்கு ஒருமுறைதான் கூறினேன். அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள்-கட்சி ஆட்களை என் மேல் ஏவியது, நடந்ததை தவறாக சித்தரித்தது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி என்னை மிரட்டியது மற்றும் சட்ட ரீதியாக துன்புறுத்தியது ஆகியவை அனைவரும் அறிந்ததே.
இது ஒரு கடினமான போராட்டமாக இருந்தது. எனது வழக்கறிஞர் டி.கீதா மற்றும் அவரது குழுவிற்கு நான் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியது சர்ச்சையாக்கப்பட்டவுடன் எனது ஒரே நோக்கம், அந்த நான்கு வார்த்தைகள் கவனம் சிதறாமல், குறி தவறாமல் நான்கு திசைகளிலும் எதிரொலிக்க வேண்டும் என்பதே.
என்னுடைய அந்த மௌனத்தை நிரப்பி, என் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, எனது உரிமைகளுக்காக குரல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பெரிய அளவில் அரசியல் நெருக்கடி மற்றும் துன்புறுத்தல்களிடம் இருந்து நான் தப்பிக்க மிக முக்கிய காரணம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொது வாழ்வில் உள்ள முற்போக்குவாதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் துரிதமான அளவுக்கதிகமான ஆதரவே. நன்றி.
இல்லாவிடில், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் காவல் துறையினரின் அடக்குமுறை நடவடிக்கைகளால் நான் காணாமல் போயிருப்பேன். இறுதியாக, நாம் அனைவரும் அரசியல் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நிற்க வேண்டும் என்றும் நான் மனதார விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "மாணவர்களிடம் ஜாதி மோதலை ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் திணிக்கின்றன" - திருமாவளவன் குற்றச்சாட்டு!