மதுரை: கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மருத்துவக்கல்லூரி பேராசிரியருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது மாணவி ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் பிரிவில், கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி மாணவி விடுதியிலேயே இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து, அந்த அறையைச் சோதனை செய்த போது அங்கு ஊசியும் மருந்து பாட்டிலும் இருந்தது. அது தசைகளைத் தளர்வு அடையச் செய்யும் மருந்து என விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாக மருத்துவக் கல்லூரி மாணவி எழுதி வைத்த கடிதத்தில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர், மருத்துவ மேற்படிப்பு மாணவர் மற்றும் மாணவி ஆகியோர் தான் தனது மரணத்திற்குக் காரணம் எனவும் எழுதி வைத்திருந்த கடிதமும் கிடைத்தது.