மதுரை மாவட்டம் முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்பவரது மகன் பழனிகுமார் (22). மனநலம் குன்றிய அவருக்கு பிறவியிலிருந்தே பேசுவதிலும், நடப்பதிலும் குறைபாடு உள்ளது. இந்நிலையில் தனது மாற்றுத்திறனாளி மகனை வெளியில் அழைத்துச் செல்லும்போது தாய் மாரீஸ்வரி இடுப்பில் சுமந்து செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகனிடன் மாரீஸ்வரி மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில், "தனது மகனை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும் என பலரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை உதவிகள் கிடைக்கவில்லை.நீங்களாவது உதவ வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், தனது உதவியாளர், தன்னார்வலர்கள் உதவியுடன் புதிய வடிவமைப்பில் மாற்றுத்திறனாளி இளைஞர் அமரக்கூடிய வகையில் இருக்கையுடன் கூடிய இருசக்கர வாகனத்தை வழங்கினார்.